‘பயிற்சியை மேம்படுத்துங்கள்; போருக்குத் தயாராகுங்கள்’ - பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சீன அதிபரின் பேச்சு


படைகளின் பயிற்சியையும், போருக்கான ஆயத்த நிலையையும் மேம்படுத்துமாறு சீன ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தகவலை சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழான ஷின்ஹுவா வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். இதன் மூலம் தன் வாழ்நாள் முழுவதும் அதிபராகத் தொடரும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். மா சே துங்குக்குப் பின்னர் உறுதியான தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார். இந்த மாநாட்டின்போது, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், சீன ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைத் தலைமையகத்துக்கு முதன்முறையாக நேற்று அவர் சென்றிருந்தார்.

ராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், “மொத்த ராணுவமும், அனைத்து ஆற்றலையும் அர்ப்பணித்து, போர் ஆயத்த நிலைக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். போரிட்டு வெற்றி பெறும் வகையிலும், புதிய யுகத்தில் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையிலும் தனது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

உலகம் கடந்த ஒரு நூற்றாண்டாகக் கண்டிராத பெரும் மாற்றங்களுக்குட்பட்டிருப்பதாகக் கூறிய ஜின்பிங், தேசப் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையின்மையும், நிச்சயமற்ற தன்மையும் எதிர்கொண்டிருப்பதாகவும், ராணுவத்தின் பணிகள் கடினமானதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்திய எல்லையில் அவ்வப்போது சீண்டல்களில் சீன ராணுவம் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்ட நிலையில், ஜி ஜின்பிங் இப்படிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

x