தனுஷ்கா குணதிலகா பாலியல் வழக்கு: மூன்று நபர் குழுவை அமைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

2015 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருபவர் தனுஷ்கா குணதிலகா. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளிலும், 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி-20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

தற்போது நடந்துவரும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்கா குணதிலகா, சிட்னியில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நவம்பர் 6-ல் கைதுசெய்யப்பட்டார்.

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணை சிட்னி புறநகர்ப் பகுதியில் சந்தித்த தனுஷ்கா, அவரை அழைத்துக்கொண்டு உணவகத்தில் சாப்பிடச் சென்றார். அப்பெண்ணின் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது விருப்பம் இல்லாமல் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பைப் போட்டியில், அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் இலங்கை அணி கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பிவிட்டது. தனுஷ்கா தற்போது சிட்னி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்திருக்கும் குழுவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிஸிரா ரத்னநாயகே, வழக்கறிஞர்கள் நிரோஷனா பெரேரா, அசேலா ரெகவா ஆகிய மூவர் இடம்பெற்றிருக்கின்றனர். தனுஷ்கா விவகாரம் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கை அணி வீரர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்தும் இந்தக் குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

x