‘பெண்கள் மது அருந்துவதால்தான் பிறப்பு விகிதம் குறைகிறது!’


ஜாரோஸ்லாவ் காஸின்ஸ்கி

போலந்து நாட்டில் பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணம், பெண்கள் அதிகமாக மது அருந்துவதுதான் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் பிரதமருமான ஜாரோஸ்லாவ் காஸின்ஸ்கி.

போலந்து நாட்டுப் பெண்களின் சராசரி குழந்தைப் பிறப்பு விகிதம் 1.3 ஆகத் தற்போது பதிவாகியிருக்கிறது. இது ஐரோப்பாவின் சராசரியைவிடவும் குறைவு. இந்நிலையில், பிறப்பு விகிதம் குறைவதற்கு, பெண்களின் மதுப் பழக்கத்தின் மீது பழிபோட்டிருக்கிறார் ஜாரோஸ்லாவ் காஸின்ஸ்கி. ஆளுங்கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் தலைவரான ஜாரோஸ்லாவ், 2006 முதல் 2007 வரை போலந்தின் பிரதமராக இருந்தவர்.

கடந்த சனிக்கிழமை (நவ.5) இதுகுறித்துப் பேசிய அவர், “பெண்கள் 25 வயது வரை அதே வயதுடைய ஆண்களைப் போலவே மது அருந்தும் நிலை தொடர்ந்தால், குழந்தைகளே பிறக்காது. ஒரு ஆண், குடிகாரராக மாற சராசரியாக 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக மது அருந்த வேண்டும். ஆனால், ஒரு பெண் இரண்டு ஆண்டுகள் அப்படி மது அருந்தினாலே குடிகாரராகிவிடுவார்” என்று கூறினார்.

இந்தத் தகவலை ஒரு மருத்துவர் தன்னிடம் சொன்னதாகக் குறிப்பிட்ட அவர், தனது ஆண் நோயாளிகளில் மூன்று பங்கினரை குடிப்பழக்கத்திலிருந்து அந்த மருத்துவரால் வெளியே கொண்டுவர முடிந்தது; ஆனால் எந்தப் பெண்ணையும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தான் கருதவில்லை; ஒரு பெண் தாயாவதற்குப் போதிய முதிர்ச்சி தேவை என்று கூறிய ஜாரோஸ்லாவ், “ஆனால், 25 வயதுவரை மது அருந்தினால், நன்றாக இருக்காது” என்றும் குறிப்பிட்டார்.

அவரது கருத்தை இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், பெண்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கண்டித்திருக்கின்றனர்.

பொருளாதாரச் சிக்கல்கள், கருக்கலைப்பு தொடர்பாக சட்டம் மற்றும் நீதிக் கட்சி அரசு அமல்படுத்தியிருக்கும் கடும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால்தான் போலந்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் என்று பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சட்டம் மற்றும் நீதிக் கட்சி அரசு குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் எதிரானது என்று இடதுசாரித் தலைவர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

73 வயதாகும் ஜாரோஸ்லாவ் காஸின்ஸ்கிக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

x