ஐபோன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்!


ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஐபோன்கள் குறைவாகவே சந்தைக்கு வரும் என்றும், பெரும்பாலான ஐபோன்கள் வாடிக்கையாளர்களின் கைக்குக் கிடைக்க தாமதமாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

என்ன காரணம்?

சீனாவின் ஹெனான் மாகாணத்தின் தலைநகரமான செங்க்சாவில் உள்ள விமான நிலையப் பொருளாதார மண்டலத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கிவருகிறது. தைவானைச் சேர்ந்தவர்கள் நடத்தும் இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பணிபுரிந்துவருகின்றனர். ஏறத்தாழ, உலகின் 50 சதவீத ஐபோன்கள் இங்குதான் தயாராகின்றன.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய ‘ஐபோன் - 14’ போன்களை ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்தச் சூழலில், சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸின் துணைத் திரிபுகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக, ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு கடுமையாக அமல்படுத்திவருகிறது.

1.3 கோடி மக்கள்தொகையைக் கொண்ட செங்க்சாவ் நகரிலும் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் சிலருக்கு சமீபத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இத்தனைக்கு மத்தியிலும், விடுமுறை கால விற்பனைக்காக ஆப்பிள் நிறுவனத்துக்கான ஐபோன் தயாரிப்பில் மும்முரமாக இருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் உற்பத்தியைத் தொடர்ந்தது. உணவு முதல் உடை வர பல்வேறு விஷயங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தாங்க முடியாமல் அந்நிறுவன ஊழியர்கள் பலர் அந்நிறுவனத்தின் கம்பி வேலிகளைத் தாண்டிக் குதித்து சொந்த ஊர் நோக்கி தப்பிச் சென்றனர். பலர் நடந்தே செல்ல, சிலர் கிடைத்த வாகனங்களில் தொற்றிக்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

உற்பத்தியில் சரிவு

இப்படி பல்வேறு பிரச்சினைகள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஏற்பட்டிருப்பதால், அதன் உற்பத்தி குறைந்திருக்கிறது. இந்தக் காரணத்தால், ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மாதமே செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்பார்த்திருந்தது போலவே இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதன்படி, தங்கள் நிறுவனத்தின் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஐபோன்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் தொழிலாளர்களின் நிலை குறித்துக் கவலைப்படாமல் உற்பத்தி குறித்தே ஆப்பிள் நிறுவனம் அக்கறை செலுத்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது கரோனா பரவலுக்கு முன்பு, ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் 100 மணி நேரத்துக்கு அதிகமாகப் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட இலக்கை எட்டாவிட்டால் தண்டிக்கப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x