‘பொய்களை உமிழ்கிறது ட்விட்டர்!’


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எலான் மஸ்க் வாங்கியிருக்கும் ட்விட்டர் சமூகவலைதளம் பொய்களை உமிழ்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்திருக்கிறார்.

ட்விட்டர் நிறுவனத்தைத் தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக வாங்கியிருப்பத்துடன் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பொறியியல், தகவல் தொடர்பு, மிஷின் லேர்னிங் உள்ளிட்ட பிரிவுகளில் வேலைபார்த்தவர்கள்தான் பணிநீக்க நடவடிக்கைக்கு இலக்காகியிருக்கிறார்கள். பல விளம்பரதாரர்கள் பின்வாங்கிவிட்டதால், வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை அழிக்க செயற்பாட்டாளர்கள் முயற்சிப்பதாகவும் இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் எலான் மஸ்க்.

கருத்து சுதந்திரத்தை மீட்டெடுக்கப்போவதாக எலான் மஸ்க் உறுதியளித்திருக்கிறார். எனினும், ட்விட்டரை வாங்கும் முயற்சியில் அவர் இறங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பிரதான விளம்பரதாரர்கள் அச்சம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், எலான் மஸ்க்கைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். “உலகம் முழுவதும் பொய்களை உமிழ்ந்துவரும் ஒரு நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியிருப்பது நம் அனைவரையும் கவலையடைய வைத்திருக்கிறது. அமெரிக்காவில் (ட்விட்டர் பதிவுகளைக் கண்காணிக்க, திருத்த) எந்த ஆசிரியரும் இல்லை. இந்தச் சூழலில், ஆபத்தான நிலையில் இருப்பது என்ன என இளைஞர்கள் புரிந்துகொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்புச் செயலர் கரீன் ஜான் பியர், வெறுப்புக் கருத்துகளையும், தவறான தகவல்களையும் குறைப்பதில் ஜோ பைடன் உறுதியுடன் இருப்பதாகவும், இது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.

x