சீண்டும் சீனா: கல்வான் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களைப் பாலங்களுக்கு வைத்த ஜின்பிங் அரசு


கல்வான் சம்பவத்தில் உயிரிழந்த 4 சீன ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது சொந்த ஊர்களின் பெயர்களை, அக்சாய் சின் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைப் பாலங்களுக்கு வைத்திருக்கிறது சீன அரசு.

ஜி219 தேசிய நெடுஞ்சாலை, சீனாவின் மேற்கு எல்லையில் அக்சாய் சின் பகுதியில், திபெத்தையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் வகையில் 1950-களில் அமைக்கப்பட்டது. அது இந்திய நிலப்பகுதியில் அமைக்கப்படுவதாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. 1962-ல் நிகழ்ந்த இந்திய - சீனப் போருக்கு இது முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தப் பகுதியில் உள்ள 11 பாலங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, சீன ராணுவ வீரர்களான சென் ஜியாங்ராங், ஜியாவோ சியுவான், வாங் ஜோரான், சென் ஹோங்ஜுன் ஆடிய நால்வரின் பெயர்களும், அவர்களின் சொந்த ஊர்களின் பெயர்களும் அந்தப் பாலங்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் நால்வரும், கல்வான் கைகலப்பில் உயிரிழந்தவர்கள்.

கல்வான் சம்பவம்

2020 மே மாதம் லடாக் அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தங்கள் தரப்பில் உயிரிழப்பு நேர்ந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்காத சீனா, 4 பேர் அதில் உயிரிழந்ததாக 2021 பிப்ரவரியில் அறிவித்தது.

இந்நிலையில், அந்த நால்வரின் நினைவாக இதைச் செய்திருப்பதாக ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்திருக்கிறது. இது இந்தியாவைச் சீண்டும் செயல் என்றே கருதப்படுகிறது. கல்வான் சம்பவத்தில் இந்திய வீரர்களுடன் மோதிய சீன வீரர்களைத் தொடர்ந்து கெளரவப்படுத்திவருகிறது அதிபர் ஜி ஜின்பிங் அரசு.

கல்வான் சம்பவத்தில் ஈடுபட்ட சீனத் தளபதி சி ஃபாபோவ், கடந்த மாதம் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கெளரவிக்கப்பட்டார். இந்த நகர்வுகள் மூலம் சீனாவுக்குள் எழுந்திருக்கும் விமர்சனங்களை நீர்த்துப்போகச் செய்யவும், இந்தியாவைச் சீண்டவும் ஜி ஜின்பிங் முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.

x