50% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் எலான் மஸ்க்


ட்விட்டர் அதிகாரத்தை கைக்கொண்ட ஒரே வாரத்தில் தனது அதிரடியான நடவடிக்கைகளால், ட்விட்டர் தளத்திலும் அதன் நிர்வாகத்திலும் சகலரையும் மிரளவைத்து வருகிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கியபோதே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. எலான் முடிவுக்கு எதிராக ட்விட்டர் நிர்வாகம் நீதிமன்ற படியேறியது. ’ட்விட்டரை வாங்கியதும் இப்போதைய நிர்வாகத்தில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்வேன்’ என்று அப்போதே எலான் சொல்லியிருந்தார். அதன்படியே ட்விட்டர் லகான், எலான் வசம் வந்ததும் சாட்டையை சொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஒரே உத்தரவில் 7,500 முதன்மை ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது ட்விட்டரின் புதிய நிர்வாகம். மிச்சமிருப்போரில் பெருமளவு ஊழியர்களை வீட்டிலேயே அமர்ந்து மறு உத்தரவு வரும்வரை காத்திருக்குமாறு பணித்திருக்கிறது. ஏராளமானோர் தங்களது அலுவலக தளம் மற்றும் அதிகாரபூர்வ மெயில் கணக்கை அணுக முடியவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் உள்விவகார ஆவணங்களை மேற்கோள் காட்டும் ஏஎஃபி செய்தி நிறுவனம், ட்விட்டரின் சரிபாதி ஊழியர்கள் களையெடுப்புக்கு ஆளாவார்கள் என்கிறது. வேலை நீக்கம் தொடர்பான எந்தவொரு முன்னறிவிப்போ, அவகாசமோ வழங்காது எலான் மஸ்க் மேற்கொள்ளும் இரக்கமற்ற நடவடிக்கைகள் ட்விட்டர் தளத்திலும் அதிருப்தி அலையை உருவாக்கி உள்ளன. பணியிழந்த ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சுய விபரங்களை வெளியிட்டு ட்விட்டர் தளம் வாயிலாகவே வேலை தேடலை தொடங்கியிருக்கிறார்கள்.

தினத்துக்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பில் தத்தளிக்கும் ட்விட்டர் நிறுவனத்தின் மீட்சிக்கு இந்த பணிநீக்கம் தவிர்க்க முடியாதது என்று காரணம் கற்பித்திருக்கிறார் எலான் மஸ்க். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ட்விட்டர் வர்த்தகத்தை சுமுகமாய் முடிக்க தனது டெஸ்லா கார் நிறுவனத்தின் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றதோடு, கணிசமான கடனுக்கும் எலான் ஆளாகியிருப்பதும் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணியாக சொல்லப்படுகிறது. பணியாளர் நீக்கத்தோடு, ’ப்ளூ டிக்’ உட்பட ட்விட்டரின் பல்வேறு பிரத்யேக வசதிகளை கட்டண அடிப்படையில் வழங்கவும் எலான் முடிவு செய்திருக்கிறார்.

x