‘கடவுள் என் பக்கம்’: இம்ரான் உருக்கம்


இம்ரான் கான்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் தப்பியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‘கடவுள் என் பக்கமிருக்கிறார்; எனக்கு இன்னொரு வாழ்க்கை வழங்கியிருக்கிறார்’ என உருகியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் ஏப்ரலில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நெருக்கடி காரணமாக பதவியிழந்தார். புதிதாக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சிக்கு எதிராகவும், முறையான தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்யக்கோரியும் அவரது கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அங்கமாய் தலைநகர் இஸ்லமாபாத் நோக்கிய புதிய பேரணியை இம்ரான் கான் அறிவித்தார்.

காலில் குண்டு பாய்ந்த நிலையில் தொண்டர்களிடம் கையசைக்கும் இம்ரான் கான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தொடங்கிய பேரணியில் பங்கேற்ற இம்ரான் கான் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இதில் காலில் காயமடைந்த இம்ரான் கான் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உட்பட உடனிருந்த 10 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய மர்ம நபரை மடக்க முயற்சித்த கட்சி தொண்டர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான் முழு சுயநினைவுடன் உள்ளார். இந்த தாக்குதல் குறித்து பேட்டியளித்துள்ள இம்ரான் கான், ‘கடவுள் என் பக்கம் இருக்கிறார். இன்னொரு வாழ்க்கையை அவர் எனக்கு வழங்கியுள்ளார்’ என உருகியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரரான இம்ரான் கான் இந்த 70 வயதிலும் உடலோம்பலில் தீவிரம் காட்டுபவர். ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் இம்ரான் கான், காலில் குண்டு பாய்ந்ததை சுலபமாக கடந்திருக்கிறார். அந்த குண்டினை அகற்றியுள்ள மருத்துவர்கள், இம்ரான் கானின் மருத்துவமனை பரமாரிப்பினை நீட்டித்துள்ளனர். இம்ரான் கான் மீதான இந்த தாக்குதல் மற்றும் அவருக்கு ஆதரவாக எழுந்துள்ள அனுதாப அலை ஆகியவை, ஆளும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளன.

x