ஏவுகணைகள் மூலம் எச்சரிக்கை: வம்புக்கிழுத்த வட கொரியா, திருப்பியடிக்கும் தென் கொரியா!


வட கொரியா - தென் கொரியா இடையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பகையின் ஒரு பகுதியாக, அவ்வப்போது ஏவுகணைகள் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கையைப் பரிமாறிக்கொள்ளும். குறிப்பாக, அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாக கூட்டாக ராணுவ ஒத்திகை நடத்தினால், பதிலடியாக தென் கொரியா இருக்கும் திசைநோக்கி வட கொரியா சில ஏவுகணைகளை ஏவி எச்சரிக்கும். சில சமயம், வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவமும் தென் கொரிய ராணுவமும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும். தொடர்கதையாகிவிட்ட இந்த வரலாற்றில், ஜப்பான் போன்ற அண்டை நாடுகள் தொல்லைக்குள்ளாவதும் உண்டு. இப்போது நடந்திருப்பதும் இதே கதைதான்!

பின்னணி என்ன?

தலைநகர் சியோலில் அக்டோபர் 29 இரவில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து ஒரு வாரம் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். அதேசமயம், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு ஒத்திகை நடத்துவதை இந்தச் சூழலிலும் தொடர்கிறது தென் கொரியா. திங்கள்கிழமை (அக்.31) இரு நாடுகளும் பெரிய அளவில் வான்வழித் தாக்குதலுக்கான ஒத்திகையில் ஈடுபட்டன. இதில் ஏராளமான போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

‘விழிப்புணர்வுப் புயல்’ (Vigilant Storm) எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையால் வட கொரியா ஆத்திரமடைந்தது.

இதையடுத்து, இன்று காலை வட கொரியா ஏவிய ஏவுகணை, தென் கொரியக் கடற்கரைக்கு அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விழுந்தது. தென் கொரியாவின் சோக்சோ நகரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் இது. தென் கொரியக் கடற்கரை அருகில் முதன்முறையாக வட கொரியாவின் ஏவுகணை விழுந்தது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சோக்சோ நகரில் எச்சரிக்கை ஒலி (சைரன்) எழுப்பப்பட்டது.

இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சிக்குப் பதிலடியாகவே இதைச் செய்திருப்பதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. ‘இரு நாடுகளும் நடத்திய ஒத்திகை முரட்டுத்தனமானது; ஆத்திரமூட்டக்கூடியது. இது எங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது’ என்று வட கொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளர் பாக் ஜாங் சோன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1990-களில் இராக் மீது அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் நடத்திய ’பாலைவனப் புயல்’ (Desert Storm) தாக்குதலை நினைவூட்டும் வகையில் இந்த ஒத்திகைக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பதிலடியாக, தென் கொரியாவின் போர் விமானங்களிலிருந்து மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன. வழக்கம்போல வட கொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக ஜப்பான் தெரிவித்திருக்கிறது. அதில் இரண்டாவது ஏவுகணை ஜப்பானை நோக்கி ஏவப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யாசுகாஸு ஹமாடா தெரிவித்திருக்கிறார். வட கொரியா இப்போது புதிய வழிமுறைகளில் ஏவுகணைகளை ஏவுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் 2017-க்குப் பிறகு அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரியா ஆயத்தமாகிவருகிறது என அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்திருப்பதுதான். அப்படி நடந்தால், அது கிழக்காசியப் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

x