டச்சு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற ஓவியத்தைச் சேதப்படுத்த, பருவநிலைச் செயற்பாட்டாளர்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள டச்சு அருங்காட்சியகத்தில், உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஜோஹன்னஸ் வெர்மீர் வரைந்த ’முத்து பதித்த தோடணிந்த பெண்’ (Girl with a Pearl Earring) எனும் ஓவியம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த ஓவியம் கண்ணாடிச் சட்டகத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், அக்டோபர் 27-ம் தேதி இந்த ஓவியத்தைச் சேதப்படுத்த பருவநிலைச் செயற்பாட்டாளர்கள் சிலர் முயன்றனர். ஒருவர் தன் தலையில் பசை போன்ற ஒரு களிம்பைப் பூசியபடி அந்த ஓவியத்தின் மீது வைத்து தேய்த்தார். அப்போது இன்னொருவர் அவர் தலைமீது ஒரு டின்னிலிருந்து பசை போன்ற களிம்பைக் கொட்டினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. கண்ணாடிச் சட்டகத்தில் இருந்ததால் ஓவியம் சேதமடையவில்லை. மறுநாளே அந்த ஓவியம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சமீபகாலமாக, உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் மீது இப்படியான தாக்குதல்களைப் பருவநிலைச் செயற்பாட்டாளர்கள் நடத்திவருவது பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் கலைப் படைப்புகள் மீது சூப் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வீசுவதை ஒரு பாணியாக அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
காரணம் என்ன?
பருவநிலை மாற்றம் குறித்த பரப்புரையை மேற்கொண்டுவரும் செயற்பாட்டாளர்கள் அதுதொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனினும், இவ்விஷயத்தில் மக்கள் மத்தியில் போதிய கவனம் பெற முடியவில்லை என அவர்கள் கருதுகிறார்கள். இதனாலேயே, உலகப் புகழ்பெற்ற கலைப் படைப்புகள் மீது குறிவைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக, பூமி மற்றும் பூமியில் வாழும் உயிர்கள் ஆகியவற்றைவிடவும் கலைப் படைப்புகள் முக்கியமானவை அல்ல என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.