குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சூ நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. 1879-ல் கட்டப்பட்ட இந்தப் பாலம், மோர்பி நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டுவந்தது. புனரமைப்புப் பணிகளுக்காகச் சில மாதங்கள் இந்தப் பாலம் மூடப்பட்டது. ஒரேவா எனும் தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், 5 நாட்களுக்கு முன்புதான் இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும், அதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தீபாவளி, குஜராத் புத்தாண்டு ஆகிய கொண்டாட்டங்களை ஒட்டி, அதிக அளவில் பார்வையாளர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) அந்தப் பாலத்தில் குவிந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இன்று இந்தியாவுக்குத் துணையாக நாங்கள் நிற்கிறோம். பால விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் குடும்பங்களுக்கு நானும் என் மனைவி ஜில் பைடனும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அகால மரணமடைந்தோருக்கு அஞ்சலி தெரிவிப்பதில் குஜராத் மக்களுடன் இணைந்துகொள்கிறோம்’ என அதில் கூறியிருக்கிறார்.
மேலும், ‘அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாத கூட்டு நாடுகள். இரு நாடுகளின் குடிமக்களுக்கு இடையே அழமான பிணைப்பு உண்டு. இந்தக் கடினமான தருணத்தில், இந்திய மக்களுக்குத் துணை நிற்கிறோம். தொடர்ந்து ஆதரவு தருகிறோம்’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.