சியோல் ஹாலோவீன் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அசம்பாவிதம் நிகழ்ந்தது எப்படி?


தென் கொரியத் தலைநகர் சியோலில், ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐக் கடந்துவிட்டது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சியோலில் உள்ள பிரதான சந்தைப் பகுதிகளில் ஒன்றான இடாய்வான் மாவட்ட சந்தையில் நேற்று ஹாலோவீன் கொண்டாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான கடைகள், மதுபான விடுதிக்கேளிக்கை விடுதிகள் நிறைந்த அந்தப் பகுதியில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.

அப்போது, இரவு 10.40 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிவந்தனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 19 பேர் வெளிநாட்டினர்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் உறவினர்களைக் காணவில்லை என 355-க்கும் மேற்பட்டோர் புகார் செய்திருப்பதாகவும் சியோல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாத ஹாலோவீன் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடும் உற்சாகத்தில், விதவிதமான மாறு வேடங்களுடன் மக்கள் கூடியிருந்தனர். பெரும்பாலானோர் 20 வயதுகளில் இருந்த இளைஞர்கள்.

ஒரு குறுகிய, சாய்வான சந்துப் பகுதியில் ஏராளமானோர் சென்றுகொண்டிருந்தபோது ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முன்னேறியதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதில் பலரும் நிலைதடுமாறி கீழே விழ, அவர்கள் மீது மற்றவர்கள் விழுந்தனர். இதில் மூச்சுத் திணறி, மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்தனர். பலர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். முதலுதவி செய்த பின்னரும் பலர் உயிரிழந்தனர்.

பலரது முகங்கள் வெளுத்துப்போய் இருந்ததாகவும், பலருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் அவர்களுக்கு சுவாசம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவே சிரமமாக இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்த சில மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உயிருக்குப் போராடியவர்களைக் காப்பாற்ற அந்தப் பகுதி மக்கள் முயற்சி செய்த காட்சிகளும், உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலையில் வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த காட்சிகளும் வைரலாகின. பல உடல்கள் அருகில் இருந்த ஜிம்களில் கிடத்தப்பட்டிருந்தன. தென் கொரியாவில் நிகழ்ந்திருக்கும் மிக மோசமான விபத்தாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.

சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல், தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

x