தென் கொரியத் தலைநகரான சியோலில், ஹாலோவீன் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 149 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சியோலில் உள்ள பிரதான சந்தைப் பகுதிகளில் ஒன்றான இடாய்வான் சந்தையில் நேற்று ஹாலோவீன் கொண்டாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான கடைகள், கேளிக்கை விடுதிகள் நிறைந்த அந்தப் பகுதியில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாத இந்தப் பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடும் உற்சாகத்தில், விதவிதமான மாறு வேடங்களுடன் மக்கள் திளைத்திருந்தனர்.
அப்போது, இரவு 10.40 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் அங்கிருந்த உடல்களை அப்புறப்படுத்தியதுடன், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
மயக்கமடைந்து விழுந்து கிடந்த பலருக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் முதலுதவி செய்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கின்றன.
இந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் ட்வீட் செய்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.