‘நான்சி எங்கே?’ - அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல்!


நான்சி பெலோசியின் வீட்டுக்கு அருகே செய்தியாளர்கள்...

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதல் நடத்திய நபரின் பின்னணி குறித்த தகவல்களும் அதிர்ச்சி அளிக்கின்றன.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி, 2019 முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பதவிவகிக்கிறார். 82 வயதாகும் நான்சி பெலோசியும் அவரது கணவர் பால் பெலோசியும் (82) கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டில் வசித்துவருகின்றனர். பால் பெலோசி ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு டேவிட் டிபாபே (42) எனும் நபர் அத்துமீறி அவர்களின் வீட்டுக்குள் நுழைந்ததுடன், அங்கிருந்த பால் பெலோசி மீது சுத்தியல் மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பால் பெலோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மண்டை ஓட்டில் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

யார் இந்த டேவிட் டிபாபே?

நான்சி பெலோசியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த டேவிட் டிபாபே, ‘நான்சி எங்கே?’ என்று சத்தமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர் உள்ளே நுழைந்த தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பால் பெலோசியைச் சுத்தியலால் டேவிட் டிபாபே தாக்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. பால் பெலோசியும் தற்காப்புக்காக அவருடன் போராடிக்கொண்டிருந்தார். துரிதமாகச் செயல்பட்டு டேவிட் டிபாபேயை மடக்கிய காவலர்கள் அவரைக் கைதுசெய்தனர்.

நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றிருந்தபோது...

சபாநாயகர் நான்சி பெலோசி மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிருந்தாரா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அவர் மீது, கொலை முயற்சி, பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது, முதியோர் மீது அத்துமீறல், கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

அவரது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்த பதிவுகள் அவர் சதிக்கோட்பாடுகளில் (conspiracy theories) ஆர்வம் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன. 2020-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள், கோவிட்-19 பெருந்தொற்று குறித்த சதிக் கோட்பாடுகள், சமூகவலைதள நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்த கண்டனங்கள் போன்றவை அவரது பதிவுகளில் அதிகம் இடம்பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். உளவியல் சிக்கல்கள் கொண்டவர் என அவருக்கு அறிமுகமானவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சபாநாயகர் நான்சி பெலோசி, குடியரசுக் கட்சியினரின் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானவர். 2021 ஜனவரி 6-ல், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டபோது, நான்சி பெலோசியின் அலுவலகம் சூறையாடப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, ஆகஸ்ட் 2-ம் தேதி தைவானுக்குச் சென்றது சீனாவைக் கோபமடையவைத்தது. தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிவரும் சீன அரசு, அவரது வருகையைக் கடுமையாகக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

x