தீபாவளி நாளில் பிரிட்டன் புதிய பிரதமராக இந்தியர் பதவியேற்றால் வாட்ஸ்-அப் முடங்கும் என்று முன்கூட்டியே கணித்த பெண்ணுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
பிரிட்டன் பிரதமராகப் பதவிவகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலகிய பின்னர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தான் அடுத்த பிரதமராக வருவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்பார்த்தது போலவே, கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-க்களின் பெருவாரியான ஆதரவுடன் நேற்று (அக்.25) பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டார் ரிஷி சுனக்.
இதற்கிடையே, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியனான சிந்து வெங்கட்நாராயணன் (சிந்து வீ), ‘ஒரு பில்லியன் இந்தியர்களுக்கு தீபாவளியும், ஒரு பிரிட்டன் பிரதமரும் கிடைத்தால் நாளை வாட்ஸ்-அப் முடங்கிவிடும்’ என்று அக்டோபர் 24-ம் தேதி அதிகாலை 1.56 மணிக்கு ட்வீட் செய்திருந்தார்.
ள்அவர் கணித்ததைப் போலவே, தீபாவளியை ஒட்டி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகிவிட்டார். கூடவே நேற்று மதியம் 12.07 மணி அளவில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ட்விட்டர் முடங்கியது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.
சிந்து வீ கணித்த இரண்டு விஷயங்களும் நடந்தேறிவிட்டதால், இணையவாசிகள் ஆச்சரியமடைந்து அவரது ட்விட்டர் பதிவைப் பாராட்டி பின்னூட்டங்கள் எழுதிவருகின்றனர். ’நீங்கள் காலத்தால் முற்பட்டவர்’ என ஒருவர் பாராட்டியிருக்கிறார். இன்னொருவர், ‘அடுத்து நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக எதையேனும் கணித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.