‘லிஸ் ட்ரஸ் செய்த தவறுகளைச் சரிசெய்வதே என் பணி’ - சூளுரைத்த ரிஷி சுனக்!


பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸ் முன்னிலையில் இன்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார ரீதியாக பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்துப் பேசினார்.

பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் நிலவும் குழப்பங்கள், கொள்கை முரண்பாடுகள், அரசின் செயல்பாடுகள் போன்றவற்றால் ஏற்பட்ட அரசியல் காரணமாக ஒரே ஆண்டில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்ய நேர்ந்தது. முதலில் போரிஸ் ஜான்ஸன் பதவி விலகினார். பின்னர் நடந்த தேர்தலில் ரிஷி சுனக்கை வீழ்த்தி லிஸ் ட்ரஸ் பிரதமரானார். எனினும் அவரது வரிக் கொள்கை ஏற்படுத்திய மோசமான நிதிப் பிரச்சினையின் காரணமாக அவரும் பதவி விலக நேர்ந்தது. இந்நிலையில், போட்டியில் முன்னிலை வகித்த ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தலைவரே பிரதமராகப் பதவியேற்பார் எனும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் பிரதமராகவும் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள், ரிஷி சுனக் பிரதமராவதை வரவேற்கும் வகையில் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. ரிஷி சுனக் ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைப் படங்களின் பரம ரசிகர். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘படை உன் பக்கம் இருக்கட்டும்’ (May the Force be with you) எனும் புகழ்பெற்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், ‘படை உங்களுடன் இருக்கிறது ரிஷி’ (The force is with you, Rishi) என்று தலைப்பிட்டிருக்கிறது ‘தி சன்’ நாளிதழ். ‘பிரிட்டனின் புதிய விடியல்’ எனப் புகழாரம் சூட்டியிருக்கிறது ‘தி டெய்லி மெயில்’. இடதுசாரி ஆதரவு கொண்ட ‘தி கார்டியன்’ நாளிதழ், கன்சர்வேட்டிவ் எம்.பி-க்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ரிஷி சுனக் வலியுறுத்தியிருப்பதைத் தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறது. அதன் தலைப்பு: ‘ஒன்று சேருங்கள் அல்லது உயிரை விடுங்கள்’ (unite or die).

உக்ரைன் போர், முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் வரிக் கொள்கை போன்றவற்றின் காரணமாக, பிரிட்டனில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. உடனடியாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையும் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது. மறுபக்கம், கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையின்மைக்குத் தீர்வு காண வேண்டியிருக்கிறது. இப்படிப் பெரும் சவால்கள் ரிஷி சுனக் முன்னே உள்ளன.

இந்நிலையில், இன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் முன்னிலையில் பிரிட்டனின் பிரதமராக அவர் பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது, பிரிட்டன் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் பின்விளைவுகள் இப்போதும் தொடர்கின்றன. உக்ரைன் மீது புதின் தொடுத்திருக்கும் போர், எரிவாயுச் சந்தையையையும், உலகின் விநியோகச் சங்கிலியையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ் தவறிழைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவே விரும்பினார். அவரது நோக்கம் மேன்மையானது என்றாலும் அதில் சில தவறுகள் நேர்ந்தன. கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அந்தத் தவறுகளைச் சரிசெய்வதற்காகத்தான். அந்தப் பணிகள் உடனடியாகத் தொடங்குகின்றன” என்று தெரிவித்தார்.

x