வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர்: சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நடந்தது என்ன?


சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின்போது, முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ‘தி கிரேட் ஹால் ஆஃப் பியூப்பிள்’ அரங்கில் அக்டோபர் 16-ல் தொடங்கியது. இந்த மாநாட்டின்போது, கட்சியின் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் அதிபர் ஜி ஜின்பிங்குக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர் சீனாவின் மிகவும் வலிமைவாய்ந்த தலைவராகிறார். வரும் மார்ச் மாதம் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார்.

இம்மாநாட்டின் கடைசி நாளான இன்று, முதல் வரிசையில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் அருகே ஹூ ஜின்டாவ் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, இரண்டு பேர் அங்கு வந்து அவரை இருக்கையிலிருந்து எழுப்பினர். வலுக்கட்டாயமாக எழுப்பப்பட்ட அவர், அருகில் அமர்ந்திருந்த ஜி ஜின்பிங்கின் தோளைத் தொட்டு ஏதோ பேசினார். அதிபரும் அவரிடம் ஏதோ சொன்னார். பின்னர் மேடையிலிருந்து அகற்றப்பட்ட ஹூ ஜின்டாவ் பின்னர் அரங்கிலிருந்தும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை அங்கிருந்த ஏஎஃப்பி செய்தியாளர்கள் நேரடியாகப் பார்த்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலியும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

இம்மாநாட்டின் தொடக்க நாளின்போதே ஹூ ஜின்டாவ் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டதாகவும், மேடையேறும்போது அவரைச் சிலர் கைத்தாங்கலாக அழைத்துச்சென்றதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 2002 முதல் 2012 வரை பதவி வகித்தவர் ஹூ ஜின்டாவ். 2003 முதல் 2013 வரை சீனாவின் அதிபராகப் பதவி வகித்தவரும்கூட. அவருக்குப் பின்னர்தான் ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

x