சமீபத்தில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை ரஷ்ய ஊடகமான டாஸ் (Tass) வெளியிட்டிருக்கிறது.
2014-ல் உக்ரைனின் க்ரைமியா தீபகற்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் புதின். அதன் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரைப் பயன்படுத்தி உக்ரைனின் பிற பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பதில் அவர் தீவிரம் காட்டிவருகிறார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், தெற்குப் பகுதியில் உள்ள கெர்ஸான் மற்றும் ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக அவர் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இன்று உரையாற்றிய புதின், டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா ஆகிய நான்கு பகுதிகளிலும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட க்ரைமியா மற்றும் செவஸ்டோபோல் பிராந்தியங்களைச் சேர்ந்த க்ராஸ்னடார், பெல்கொரோட், பிரையான்ஸ்க், வொரோனெஸ், குர்ஸ்க், ரஸ்தோவ் ஆகிய பகுதிகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராணுவச் சட்டத்தின்படி என்னென்ன அம்சங்கள் அப்பகுதிகளில் அமல்படுத்தப்படும் என்பது குறித்து புதின் விரிவாகக் கூறவில்லை.
எனினும், பயணத்தில் கட்டுப்பாடுகள், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதித்தல், கடுமையான தணிக்கைக் கட்டுப்பாடுகள், சட்ட அமலாக்கத் துறைகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது என்பன போன்றவை பொதுவாக ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.