சீனாவில் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் முகாமில், உரிய சிகிச்சை கிடைக்காமல் இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா பரவல் முதலில் தொடங்கிய நாடான சீனாவில், இன்றும்கூடநோய்ப் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஹெனான் மாகாணத்தின் ரூஜோ நகரில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயது பெண், உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதுதொடர்பான காணொலிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கின்றன.
ஒரு காணொலியில் அந்தப் பெண் மூச்சுவிட முடியாமல், வலிப்பு வந்ததுபோல் துடித்துக்கொண்டிருப்பது பதிவாகியிருக்கிறது. இன்னொரு காணொலியில் அந்தப் பெண்ணின் அத்தை, பலரிடம் மருத்துவ உதவி கோரிய நிலையிலும் எந்த உதவியும் கிடைக்காததால் அந்தப் பெண் மரணமடைந்ததாகக் கூறுகிறார்.
முகாமில் கடுமையான காய்ச்சல், வலிப்பு, வாந்தி என அந்த இளம் பெண் பல நாட்களாக அவதிப்பட்ட நிலையில், நகர மேயரின் ஹாட்லைன் தொலைபேசி எண், நோய்த் தடுப்புப் பிரிவு தொலைபேசி எண் எனப் பல எண்களுக்கு அழைத்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இளம் பெண்ணின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால், அந்தக் காணொலியை அனைவரும் பரப்ப வேண்டும் எனத் தன் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவரது அத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அந்த முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அந்த இளம்பெண் முகாமில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் அந்த முகாமில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். எனினும், அவர்களுக்குப் போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை எனப் புகார்கள் எழுந்திருக்கின்றன.
தலைநகர் பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், இந்தச் சம்பவத்தால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அதிகாரிகள் கவனமாக இருக்கிறார்கள்.
கரோனா தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதாக ஏற்கெனவே அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தொற்றுக்குள்ளாகாதவர்கள் கூட தனிமைப்படுத்துதல் முகாமில் அடைக்கப்படும் அவலம் நிலவுவதாகப் புகார்கள் உண்டு. கடந்த வாரம், பெய்ஜிங் நகரில் அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.