ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் ‘ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன்’ (2006) எனும் திரைப்படத்தை மறந்திருக்க மாட்டார்கள். அதில் ஏகப்பட்ட விஷப் பாம்புகள் நடு வானில் விமானப் பயணிகளை அலறவிடும். ஏறத்தாழ இதேபோன்ற சம்பவங்கள் நிஜமாகவே நடந்ததுண்டு. அமெரிக்காவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் விமானப் பயணிகளை நடுங்கவைத்துவிட்டது.
நேற்று ஃப்ளோரிடாவின் டாம்பா நகரிலிருந்து நியூஜெர்ஸி நகருக்கு ‘யுனைட்டட் ஃப்ளைட் 2038’ எனும் விமானம் புறப்பட்டுச் சென்றது. நிவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது பிசினஸ் கிளாஸில் இருந்த பயணிகள் விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததைப் பார்த்தனர். பதறிப்போன பயணிகள், விமானப் பணியாளர்களுக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பணியாளர்கள் அந்தப் பாம்பைத் தேடிக் கண்டுபிடித்து அகற்றினர். பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் வேறு ஏதேனும் பாம்பு இருக்கிறதா எனத் தேடினர். வேறு பாம்புகள் விமானத்தில் இல்லை எனத் தெரியவந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அது கார்ட்டர் வகைப் பாம்பு என விமானப் பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வகைப் பாம்புகள் விஷமற்றவை. பொதுவாகவே மனிதர்களிடமிருந்து விலகியே இருக்க விரும்புபவை. தொந்தரவு தந்தாலே ஒழிய யாரையும் இந்தப் பாம்புகள் கடிக்காது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த பிப்ரவரியில் மலேசியாவின் ஏர்ஏசியா விமானத்தின் உட்புறக் கூரையின் மீது விளக்கு அமைப்புக்குள் ஒரு பாம்பு இருந்தது தெரியவந்தது. அது தொடர்பான காணொலியும் வைரலானது. இத்தனைக்கும் அந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
அதேபோல், 2016-ல் மெக்ஸிகோவில் ஒரு விமானத்தில் பச்சை நிற விரியன் பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அது கடும் விஷம் கொண்ட பாம்பு ஆகும். மேற்கூரையில் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பாம்பு, விமானம் தரையிறங்கியதும் அவசர அவசரமாக அகற்றப்பட்டது.