இம்ரான் கான் கட்சியை தடை செய்ய முடிவு: பாகிஸ்தானில் பரபரப்பு


கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை தடை செய்ய முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, இதற்காக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போது நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளின் கூட்டணி சார்பில் ஆசிப் அலி ஜர்தாரி அதிபராகவும், ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தோல்வியை சந்தித்தது. இருந்த போதும், கணிசமான இடங்களில் அக்கட்சி வெற்றி வாகை சூடியதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியை நிரந்தரமாக தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் அத்தாத்துல்லா தரார், “பிடிஐ கட்சியை நிரந்தரமாக தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது. இம்ரான் கான் நாட்டின் ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கசிய விட்டதற்கும், உள்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த முயன்றதற்கும், வலுவான ஆதாரங்கள் இருக்கிறது.” என்றார்.

x