உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகள், அந்நாட்டின் 30 சதவீத மின்னுற்பத்தி நிலையங்களைத் தாக்கிச் சேதப்படுத்தியிருக்கின்றன.
பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, அந்நாட்டின் பல நகரங்களில் கடும் சேதத்தை விளைவித்திருக்கிறது. அத்துடன், காமிகாஸே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மின்னுற்பத்தி நிலையங்களையும் குறிவைத்துத் தாக்கிவருகிறது.
இதுதொடர்பாக, ட்வீட் செய்திருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்க்ஸி, ‘அக்டோபர் 10-ம் தேதி முதல், உக்ரைனின் 30 சதவீத மின்னுற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் நாடு முழுவதும் பெருமளவில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது’ என்று அதில் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் தலைநகர் கீவின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. குடிநீர்ப் பற்றாக்குறையும் நிலவுகிறது.
இது இன்னொரு விதமான பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறியிருக்கும் ஸெலன்ஸ்கி, புதின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லாமல் ஆகிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
எனினும், பொதுமக்கள் தொடர்பான கட்டமைப்புகளைத் தாங்கள் குறிவைப்பதில்லை என்று ரஷ்யா மறுப்பு தெரிவித்திருக்கிறது.