ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய மாணவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற நபர் 11 முறை கத்தியால் அவரைக் குத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும், இது வெறுப்புக் குற்றம் என அம்மாணவரின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன், அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரைச் சேர்ந்த ஷுபம் கர்க் எனும் 28 வயது இளைஞர், சென்னை ஐஐடியில் பயின்றவர். செப்டம்பர் மாதம் முதல் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 6-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சாலையில் ஷுபம் கர்க் சென்றுகொண்டிருந்தபோது ஒரு நபர் அவரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். பணம் கொடுக்க அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் அவரைக் கத்தியால் வெறித்தனமாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஷுபம் கர்க், சமாளித்துக்கொண்டு அருகில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரது முகம், மார்பு, அடிவயிறு என 11 இடங்களில் கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 27 வயது இளைஞர் என்றும், ஷுபம் கர்குக்குக்கு அவர் யாரென்று தெரியாது என்றும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டிருக்கும் அந்த நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அவரது உடல்நிலை மோசமடைந்துவருகிறது. அவரைச் சந்திக்க ஆஸ்திரேலியா செல்ல விசா பெற அவரது பெற்றோர் முயற்சி செய்துவருகின்றனர். இதுதொடர்பாக, ஷுபம் கர்கின் சகோதரி காவ்யா கர்க், தனது பெற்றோருக்கு அவசர விசா கிடைக்க உதவி செய்யுமாறு ட்விட்டர் பதிவு மூலம் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
நேற்று மீண்டும் இதுகுறித்து ட்வீட் செய்த காவ்யா கர்க், ‘என் சகோதரரின் உடலில் பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. அவரது உடலில் தொற்று பரவிவருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி அவசர உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, ஷுபர் கர்குக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும், அவ்சரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்குவதற்கு ஆஸ்திரேலியத் தூதரக அலுவலகம் முன்வந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே இது வழிப்பறி அல்ல, இன அடிப்படையிலான வெறுப்புக் குற்றம் என்று ஷுபம் கர்கின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், இந்தத் தாக்குதல் வெறுப்புக் குற்றத்தின் அடிப்படையில் நடந்ததல்ல என்றே ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.