‘ஏழை நாடுகளில் கடன் நெருக்கடி ஏற்படும்; அவசர நடவடிக்கைகள் அவசியம்’ - எச்சரிக்கும் ஐநா!


உலகின் மிக ஏழ்மையான 54 நாடுகளில் தீவிரமான கடன் நெருக்கடி ஏற்படும் என ஐநா வளர்ச்சித் திட்டம் (யூஎன்டிபி) எச்சரித்திருக்கிறது.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் முதல், எத்தியோப்பியா, ஜாம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் வரை பல பகுதிகளில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் கடன் நெருக்கடியும் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை இந்த வாரம், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கூட்டங்களை நடத்துகின்றன.

இந்நிலையில், ஐநா வளர்ச்சித் திட்டம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஏழை நாடுகள் எதிர்கொண்டிருக்கும் கடன் நெருக்கடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

‘54 நாடுகளில் மிகத் தீவிரமான வறுமையைத் தவிர்க்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை அந்நாடுகளுக்கு வழங்கவும் உடனடியான கடன் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலகின் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஏழை மக்கள் இந்நாடுகளில்தான் வசிக்கின்றனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய ஐநா வளர்ச்சித் திட்ட நிர்வாகி ஆசிம் ஸ்டெய்னர், “பல நாடுகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்குவது, விரிவான நிவாரண உதவிகள் வழங்குவது, பத்திர அடிப்படையிலான ஒப்பந்தங்களில் சிறப்பு உட்பிரிவுகளைச் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் நெருக்கடியைச் சமாளிக்க வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

சமாளிக்கும் வாய்ப்புகள் குறையும் சூழல் உருவாவதற்கு அல்லது சமாளிக்கவே முடியாது எனும் நிலைமை உருவாவதற்கு முன் உரிய நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

x