‘எச்சரிக்கை: இந்தியாவில் பயங்கரவாதம், பாலியல் குற்றம்’ - என்ன சொல்கிறது அமெரிக்க வெளியுறவுத் துறை?


இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கப் பயணிகள் பாலியல் குற்றங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில், வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு நான்கு நிலைகளில் எச்சரிக்கைகள் விடப்படும்.

இதில் நான்காவது நிலை என்பது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மோசமான சூழல் நிலவும் பகுதிகள் குறித்த அதிகபட்ச எச்சரிக்கை ஆகும்.

அக்டோபர் 6-ம் தேதி அந்நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்ட பயண ஆலோசனை அறிக்கையில், பாகிஸ்தானின் தற்போதைய சூழல் மூன்றாம் நிலையில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் பயங்கரவாதமும், மதவெறி அடிப்படையிலான வன்முறைச் சூழலும் நிலவுவதால் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குற்றச் செயல்கள், பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ‘பயங்கரவாதம் மற்றும் அமையின்மை காரணமாக, ஜம்மு - காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்துக்கு (கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகரான லே தவிர்த்து) செல்ல வேண்டாம். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆயுத மோதல்கள் ஏற்படலாம்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கூடவே, ‘இந்தியாவில் அதிகரித்துவரும் குற்றங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை என இந்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் போன்ற வன்முறைச் செயல்கள் நடைபெற்றிருக்கின்றன’ என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

x