உக்ரைன் போர்: முதன்முதலாக ட்ரோன் குண்டுகளைப் பயன்படுத்தும் ரஷ்யா!


உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, முதன்முறையாக ஸாப்போரிஸியா நகர் மீது ட்ரோன் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

ரஷ்யப் படைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகிவரும் உக்ரைன் நகரங்களில் ஸாப்போரிஸியா மிக முக்கியமானது ஆகும். உலகின் முக்கியமான அணு உலை அமைந்திருக்கும் ஸாப்போரிஸியா நகரில், கார்களைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்ஸான் ஆகிய பகுதிகளுடன், ஸாப்போரிஸியாவையும் ரஷ்யாவுடன் இணைத்திருக்கிறார் அதிபர் புதின்.

மறுபுறம், இந்தப் போரில் ரஷ்யாவுக்குத் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பல நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துவருகின்றன. இதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக போர்க்கால அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டிருக்கிறார் புதின். அதன்படி 3 லட்சம் ரிசர்வ் வீரர்களைப் போருக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது ரஷ்ய மக்களிடமும் அதிருப்தியையும் சர்வதேச அளவில் கண்டனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தரைப் பகுதிகளில் உக்ரைன் படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ரஷ்ய ராணுவம், இப்போது காமிகாஸே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் தயாரான ‘ஷாஹேத் - 136’ ட்ரோன்களைத்தான் ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஏவுகணைகளைவிடவும் விலை மலிவான இந்த ட்ரோன்கள் நீண்ட நேரம் வானில் வலம் வந்து, தாக்குதலுக்கான இலக்கைத் துல்லியமாகக் குறிபார்க்கும் திறன் கொண்டவை.

இந்த ட்ரோன் குண்டுகளைப் பயன்படுத்தி ஸாப்போரிஸியா நகரின் இரண்டு கட்டிடங்களைத் தகர்த்திருக்கிறது ரஷ்யப் படை. இன்னொரு தாக்குதலில் உக்ரைனியர் ஒருவர் காயமடைந்தார். ரஷ்யா ஏவிய 20-க்கும் ட்ரோன்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அவற்றிப் பெரும்பாலானவை ஈரானில் தயாரானவை என உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எந்த விதமான ட்ரோன்களையும் விநியோகிக்கவில்லை என்றும், இது ஆதாரமற்ற தகவல் என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நாஸர் கனானி கூறியிருக்கிறார்.

x