அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்: புதின் பிறந்தநாளில் விடுக்கப்படும் செய்தி என்ன?


2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஆலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான 'மெமோரியல்’, உக்ரைனின் மனித உரிமை அமைப்பான ‘சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ்’ ஆகியவற்றுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவும் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் அமைதியான முறையில் போராடிவருவதை கெளரவிக்கும் வகையில் இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்திருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதினின் 70-வது பிறந்தநாளான இன்று இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெறுகிறது. அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துவரும் சூழலில், ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புக்கும், உக்ரைனைச் சேர்ந்த அமைப்புக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெமோரியல் அமைப்பு 1980-ல் தொடங்கப்பட்டது. சோவியத் ஒன்றிய அரசின் அரசியல் அடக்குமுறைகள் குறித்த தகவல்களை அந்த அமைப்பு ஆவணப்படுத்திவந்தது. மிக நீண்டகாலமாகச் செயல்பட்டுவந்த அந்த அமைப்புக்குக் கடந்த ஆண்டு புதின் அரசு தடை விதித்தது. 2007-ல் உக்ரைனில் தொடங்கப்பட்ட சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் அமைப்பு, அந்நாட்டின் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க் குற்றங்களைத் தொகுத்து ஆவணப்படுத்திவருகிறது.

அத்துடன், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸின் அரசை எதிர்த்துப் போராடியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஆலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு இந்த விருதை வழங்குவதாக அறிவித்ததுடன், டிசம்பரில் நடக்கவிருக்கும் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொள்ள பெலாரஸ் அரசு அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் நோபல் விருது கமிட்டி கேட்டுக்கொண்டிருக்கிறது. வியாஸ்னா எனும் அமைப்பின் தலைவரான பியாலியாட்ஸ்கி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தியதற்காகக் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

புதினின் பிறந்தநாளையொட்டி இந்த விருது அறிவிக்கப்படவில்லை என விருது கமிட்டியின் தலைவரான ப்ரிட் ரெய்ஸ் ஆண்டர்சன் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், இந்த நாளில் இந்த விருது அறிவிப்பு புதினுக்கு விடுக்கப்பட்டிருக்கும் செய்திதான் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

x