இந்தியா முன்வைத்த வெறுப்புக் குற்றப் புகாரை மறுத்த கனடா: என்ன நடந்தது பகவத் கீதா பூங்காவில்?


கனடாவில் இந்தியர்கள், இந்துக் கோயில்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துவருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் எனக் கூறி, தங்கள் நாட்டவர்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்தது. கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரில் உள்ள பூங்கா ஒன்று செப்டம்பர் 28-ம் தேதி, ‘ஸ்ரீ பகவத் கீதா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் பூங்காவின் பெயர்ப் பலகையில் ‘ஸ்ரீ பகவத் கீதா’ எனும் பெயர் அழிக்கப்பட்டு காலியாக விடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பூங்கா சேதப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இது வெறுப்புக் குற்றம் என்றும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கனடா அதிகாரிகளையும் காவல் துறையினரையும் வலியுறுத்தி கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் ட்வீட் செய்திருந்தது.

இந்நிலையில், கனடா அரசு அதிகாரிகள் இதை மறுத்திருக்கின்றனர். இதுதொடர்பாக, பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரெளனும் விளக்கமளித்திருக்கிறார்.

‘சமீபத்தில் திறக்கப்பட்ட பகவத் கீதா பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து விசாரிக்க துரித நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்’ என்று ட்வீட் செய்திருக்கும் அவர், அங்கு பூங்காவின் பெயர் இல்லாமல் வெறுமனே பலகை வைக்கப்பட்டது குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதாவது, நாளை பகவத் கீதா பெயருடன் நிரந்தரமாக அங்கு பெயர்ப் பலகை வைக்கப்படும் என்றும், அதுவரை கட்டுமான நிறுவனத்தினர் தற்காலிகமாகப் பெயரற்ற அந்தப் பலகையை அங்கு வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்காக இந்தியச் சமூகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பெயர்ப் பலகையோ பூங்காவின் வேறு கட்டமைப்புகளோ சேதப்படுத்தப்பட்டதாக எந்தச் சான்றும் இல்லை என்று கூறியிருக்கும் போலீஸார், தற்காலிகமாகவே பெயரற்ற அந்தப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

x