பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இது முதல் தாக்குதல் அல்ல. ஏற்கெனவே ஒருமுறை பாகிஸ்தானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இப்போது நீதிமன்ற உத்தரவு போன்ற சரியான சட்டக் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானின் ட்விட்டர் கணக்கினை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஐநா, துருக்கி, ஈரான் மற்றும் எகிப்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் உள்ள ட்விட்டர் தடை செய்தது. ஆகஸ்டில், பாகிஸ்தானின் இருந்து செயல்படும் ஒரு யூடியூப் சேனல் உட்பட 8 யூடியூப் செய்தி சேனல்களை இந்தியா முடக்கியது. அப்போது "போலியான செய்திகள் பரப்புதல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்தினை பதிவிடுதல் " ஆகிய காரணங்களுக்காக அவை முடக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பியதற்காக இதுவரை 100 யூடியூப் சேனல்கள், 4 பேஸ்புக் பக்கங்கள், 5 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 3 இன்ஸ்டாகிராம் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.