மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் திபாலாஜி பெட்ரோசெம் பிரைவேட் லிமிட்டட் எனும் நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணத்துக்கு மறுநாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
2015-ல் ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் பின்னர், ஈரான் மீதான முந்தைய பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆனால், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, அந்நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. தற்போது விரிவான கூட்டுச் செயல் திட்டத்தை (ஜேசிபிஓஏ) மீறி அணுசக்தித் திட்டத்தை ஈரான் மேற்கொண்டுவருவதால், அந்நாட்டின் எண்ணெய் விற்பனைக்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. ஈரான் எண்ணெய் நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் பிற நாட்டு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் போன்ற இடங்களில் இயங்கிவரும் நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதில் மும்பையைச் சேர்ந்த திபாலாஜி நிறுவனமும் அடக்கம். ஈரான் எண்ணெய் வணிகத் தரகர்கள் மீது இந்நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அமெரிக்காவின் கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஓஎஃப்ஏசி) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, திபாலாஜி நிறுவனம் ஈரானின் ட்ரில்லியன்ஸ் எனும் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து பல மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது.
இந்திய நிறுவனம் ஒன்றின் மீது இப்படியான தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. குறிப்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த மறுநாளே, நேற்று இந்த அறிவிப்பை அமெரிக்கக் கருவூலத் துறை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து இந்தியா தரப்பிலிருந்து இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.