2016 முதல் தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் பிரிட்டன் இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்கன் பார்க்ஸ் எனும் விலங்குகள் சரணாலயத்தை நடத்திவருகிறார். 2017 முதல் அதன் தலைவராக இருந்துவருகிறார். இங்கு ஆப்பிரிக்க யானைகள் பராமரிக்கப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம், மலாவியின் தெற்குப் பகுதியில் உள்ள லிவோண்டே தேசியப் பூங்காவில் உள்ள கசுங்கு பகுதிக்கு 250 யானைகள் மாற்றப்பட்டன. மலாவியின் தேசியப் பூங்காவுக்கும், இளவரசர் ஹாரியின் ஆப்பிரிக்கன் பார்க்ஸ் மற்றும் விலங்குகள் நல சர்வதேச நிதியம் (ஐஃபா) ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுக்கும் இடையில் மூன்று வழியாக இந்த இடமாற்றம் நிகழ்ந்தது. இதுவரை அந்நாட்டில் நடத்தப்பட மிகப் பெரிய யானைகள் பரிமாற்றம் இது. கிரேன் மூலம் யானைகள் தூக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றது.
எனினும், இந்த பணிகளின்போது யானைகள் தாக்கி ஜூலை மாதம் இருவர் உயிரிழந்தனர். செப்டம்பர் 16-ல் மேலும் ஒருவர் யானைகளால் கொல்லப்பட்டார். முதல் இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து இரண்டு யானைகள் சுட்டுக்கொல்லப்பட்டன. இந்தத் தகவல்கள் இதற்கு முன்னர் பொதுவெளியில் வெளிவரவில்லை. தற்போது இந்தத் தகவல்கள் ஹாரியின் தொண்டு நிறுவனத்துக்கும், விலங்குகள் நல சர்வதேச நிதியத்துக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைந்துவிடாமல் தடுக்கும் வகையில் வேலிகள் அமைக்கும் பணிகள் செய்து முடிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
யானைகளை இடமாற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஹாரி தலைவர் பதவி வகிக்கும் ஆப்பிரிக்கன் பார்க்ஸ் தொண்டு நிறுவனம் அவசரப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. யானைகளை இடமாற்றும் பணிகளுக்கும் இளவரசர் ஹாரிக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றப் பணிகளால் மனிதர்கள் மட்டுமல்லாமல் யானைகளும் உயிரிழந்திருப்பது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.