இத்தாலியில் பாஸ்போர்ட் திருட்டு: இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் டிவி ஜோடி!


மும்பை: பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பொருட்களை வெளிநாட்டில் தொலைத்த இந்தி தொலைக்காட்சியின் பிரபல ஜோடி திவ்யங்கா திரிபாதி, விவேக் தஹியா ஆகியோர் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தி தொலைக்காட்சியின் பிரபல ஜோடி திவ்யங்கா திரிபாதி மற்றும் விவேக் தஹியா தங்களது 8வது திருமண நாளைக் கொண்டாட ஐரோப்பாவிற்கு ஜூலை 8-ம் தேதி சுற்றுலா சென்றுள்னர். அங்கிருந்து திவ்யங்கா விவேக்குடன் சில புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படங்களில் விவேக் மற்றும் திவ்யங்கா இருவரும் வெவ்வேறு இடங்களில் போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இத்தாலியில் பயணம் செய்த இந்த ஜோடியின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பொருட்களை காரில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இந்தியா திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் காவல் துறை கையாலாகாத நிலையில் இருப்பதாகவும் திவ்யங்கா-விவேக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக திவ்யங்காவின் கணவரும், நடிகருமான விவேக் தஹியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் அந்த வீடியோவில் காரின் கண்ணாடி உடைந்து மற்ற பொருட்கள் நொறுங்கிக் கிடக்கின்றன.

இதுகுறித்து விவேக் தஹியா கூறுகையில், " இந்த சம்பவத்தை தவிர மற்ற அனைத்தும் அருமை. நாங்கள் நேற்று புளோரன்ஸ் வந்தடைந்தோம். ஒரு நாள் அங்கே தங்கலாம் என்று நினைத்தோம். நாங்கள் தங்குவதற்காக ஓட்டலில் சோதனை செய்தபோது, ​​எங்கள் பொருட்கள் அனைத்தும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தன.

பின்னர் நாங்கள் பொருட்களை எடுக்க காருக்கு வந்தபோது, ​​​கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். எங்கள் பாஸ்போர்ட், பர்ஸ் மற்றும் சுற்றுலாவின்போது வாங்கிய விலைமதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இந்தியா திரும்ப எங்களுக்கு உதவி தேவை" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் அவர் கூறுகையில், " இந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் உள்ளூர் காவல்துறையை அணுகினோம், ஆனால் அவர்கள் எங்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது என போலீஸார் தெரிவித்தனர்" என்று அவர் கூறியுள்ளார்

x