‘பயங்கரவாதிகள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள்!’


உக்ரைனின் ஸாப்போரிஸியா நகரில் சாலையில் சென்ற கார்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் பல உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “இப்படியான செயல்களை பயங்கரவாதிகள்தான் செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியில் உள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்தன.

இதற்கிடையே, ஸாப்போரிஸியாவின் வடக்கில் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிப்ரோ நகரில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் போக்குவரத்து நிறுவனம் ஒன்று தகர்க்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 52 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. 98 பேருந்துகள் சேதமடைந்தன. அங்குள்ள அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கும் ஸெலன்ஸ்கி, ‘பயங்கரவாதிகளால் மட்டும்தான் இப்படியெல்லாம் செய்ய முடியும். நாகரிக உலகில் அவர்களுக்கு எந்த இடமும் வழங்கப்படக் கூடாது’ என்று டெலிகிராம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபுறம், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதாக அங்குள்ள ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அங்கிருந்து பல கார்களில் கிளம்பிச் சென்றவர்கள், ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்ஸான் பகுதிக்குச் சென்று தங்கள் உறவினர்களைச் சந்திக்கவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைனின் டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்ஸான் ஆகிய பகுதிகளுடன், ஸாப்போரிஸியாவையும் ரஷ்யாவுடன் இணைப்பதில் ரஷ்ய அதிபர் புதின் மும்முரமாக இருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி மாஸ்கோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படியான தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஸாப்போரிஸியா மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 16 ஏவுகணைகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

x