இந்தியாவின் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனத் தனது நாட்டுக் குடிமக்களிடம் அறிவுறுத்தியிருக்கிறது கனடா அரசு. கண்ணிவெடி அபாயம் இருப்பதாகவும், கணிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதாகவும் அதற்குக் காரணம் சொல்லியிருக்கிறது.
செப்டம்பர் 27-ல் கனடா அரசின் இணையதளம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘இந்தியா முழுவதும் பயங்கரவாதத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருக்கிறது. குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம். இந்த மாநிலங்களில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் கணிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதாலும், கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இருப்பதாலும் அங்கு செல்வதைத் தவிர்க்கவும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ‘அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பயங்கரவாதம், கிளர்ச்சி ஆகிய பிரச்சினை நிலவுவதால், அங்கு அநாவசியமான பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்’ என்று எச்சரித்த கனடா அரசு, லடாக் ஒன்றியப் பிரதேசத்துக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கவில்லை.
இதன் பின்னணியில், கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு சமீபத்தில் விடுத்த எச்சரிக்கை இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக, செப்டம்பர் 23-ல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியயது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியதுடன், ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகத்திலும், டொரன்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணைத் தூதரகங்களிலும் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது.
மிக முக்கியமாக, பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்பினர் சமீபத்தில் நடத்திய வாக்கெடுப்பை இந்தியா கடுமையாகக் கண்டித்திருந்தது.
இந்தச் சூழலில், இந்தியா விஷயத்தில் கவனமாக இருக்குமாறு கனடா தனது குடிமக்களை எச்சரித்திருப்பது கவனம் பெறுகிறது.