பெரிய நிறுவனங்கள் அநாவசியமாக ஏற்பாடு செய்யும் அலுவலக மீட்டிங்குகளால் 100 மில்லியன் டாலர் வீணாகச் செலவாகிறது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது.
அலுவலக மீட்டிங்குகள் என்பவை ஒருகாலத்தில் முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், புதிய முடிவுகளை எடுக்கவும் இன்றியமையாதவையாகக் கருதப்பட்டன. எனினும், பணிச்சுமை அதிகரித்துவிட்ட பின்னர் அலுவலக மீட்டிங்குகள் சம்பிரதாயமாக நடக்கும் சடங்குகள் போலாகிவிட்டன. அலுவலக மீட்டிங் என்றாலே, அன்றாடப் பணியில் பாதிப்பு ஏற்படுமே எனப் பெரும்பாலான ஊழியர்கள் நினைக்கும் அளவுக்குச் சூழல் மாறியிருக்கிறது.
இந்நிலையில், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவன் ரோஜெல்பெர்க், 20 தொழில் துறைகளைச் சேர்ந்த 632 ஊழியர்களிடம் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் நடத்திய ஆய்வில், அலுவலக மீட்டிங்குகளில் எவ்வளவு நேரம் ஊழியர்கள் செலவழிக்கிறார்கள், அவற்றால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது, மீட்டிங்குகளுக்கான அழைப்புகளுக்கு அவர்கள் எவ்விதம் எதிர்வினையாற்றுகிறார்கள் எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதன்படி, ஒரு வாரத்தில் சராசரியாக 18 மணி நேரத்தை அலுவலக மீட்டிங்குகளில் செலவழிப்பதாக ஆய்வில் பங்கேற்ற ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தங்களுக்கு வரும் அழைப்புகளில் 31 சதவீத அழைப்புகளை நிராகரிக்க விரும்புவதாகக் கூறியிருக்கும் ஊழியர்கள், சராசரியாக 14 சதவீத அழைப்புகளை நிராகரித்துவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
‘முக்கியத்துவம் இல்லாத மீட்டிங்குகளில் ஆர்வமில்லாமல் ஊழியர்கள் கலந்துகொள்வதால் சராசரியாக ஆண்டுக்கு ஒரு ஊழியருக்காக மட்டும் 25,000 டாலரை நிறுவனங்கள் வீணாகச் செலவு செய்கின்றன; 5,000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 101 மில்லியன் டாலரை இப்படிச் செலவழிக்கின்றன’ என்கிறது இந்த ஆய்வறிக்கை.
மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யும் மேலதிகாரியை அதிருப்தியடையச் செய்யக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலானோர் மீட்டிங்குகளைத் தவிர்க்க விரும்புவதில்லை என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இதற்கு முன்னர் ரோஜெல்பெர்க் நடத்திய ஆய்வில், சரியாக ஏற்பாடு செய்யப்படாத மீட்டிங்குகள், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி மனநிலையை உருவாக்கியதுடன், வேலையைவிட்டே வெளியேற நினைக்கும் அளவுக்கு அவர்களைச் சோர்வடையச் செய்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் தொலைதூரத்தில் இருந்தபடி வேலை பார்த்த ஊழியர்கள், காணொலி மூலம் நடந்த மீட்டிங்குகளில் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. அதிலும் கவனச் சிதறல்கள் உள்ளிட்ட எதிர்மறையான அம்சங்கள் நிறைய இருந்தது ரோஜெல்பெர்க்கின் முந்தைய ஆய்வில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது!