பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழப்பு: நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!


அபுஜா: நைஜீரியாவில் நேற்று பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட-மத்திய நைஜீரியாவில் நேற்று இரண்டு மாடி பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலேசு மாநிலத்தின் புசா புஜியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரியில் இந்த விபத்து நடந்துள்ளது. இங்கு 15 வயது, அதற்கு குறைவான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. மாணவர்கள் நேற்று வகுப்புகளுக்கு வந்த பிறகு திடீரென பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பிலேசு காவல் துறை செய்தி தொடர்பாளர் ஆல்பிரட் அலபோ கூறுகையில், “மொத்தம் 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் 132 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் ” என்றார்.

x