ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பகுதிகளை, ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. இந்தச் செய்தியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
2014-ல் உக்ரைனின் க்ரைமியா தீபகற்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் புதின். அதன் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரைப் பயன்படுத்தி உக்ரைனின் பிற பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பதில் அவர் தீவிரம் காட்டிவருகிறார். இந்நிலையில், முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி அளவில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், தெற்குப் பகுதியில் உள்ள கெர்ஸான் மற்றும் ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யாவுக்குக் கடுமையான பதிலடி கொடுத்து, சில முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டிருக்கிறது. இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை புதின் நேற்று வெளியிட்டார். உக்ரைனின் நிலப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது, ஏற்கெனவே போர் பயிற்சி பெற்ற வீரர் 3 லட்சம் வீரர்களைப் போர் முனைக்கு அனுப்புவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ரஷ்யாவின் தற்காப்புக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார். இதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்தும், கணிசமான ரஷ்யர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் முனைப்பு காட்டுகிறார் புதின்.
இந்த வாக்கெடுப்புகள் சட்டவிரோதமானவை; போலியானவை என உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.