விண்வெளிக்குச் செல்லும் சவுதி பெண்கள்: கார் ஓட்ட அனுமதி கிடைத்த நான்கே ஆண்டுகளில் அடுத்த மைல் கல்!


அரபு நாடுகள் தற்போது விண்வெளித் திட்டங்களில் முனைப்பு காட்டிவருகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், நிலவுக்கு ரஷீத் எனும் பெயரில் ஒரு ரோவரை அனுப்புகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ரோவரை அனுப்புவதன் மூலம், நிலவு திட்டத்தை முதன்முறையாகச் செயல்படுத்தும் அரபு நாடு எனும் பெருமை ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கிடைத்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியாவும் விண்வெளித் திட்டத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, சவுதியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர் உள்ளிட்ட குழுவினர் அடுத்த ஆண்டு விண்வெளிக்குச் செல்லவிருக்கின்றனர்.

‘விஷன் 2030’ எனும் விண்வெளித் திட்டத்தை சவுதி அரசு தொடங்கியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் இந்த முயற்சியில் அந்நாடு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இந்தத் திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

‘சவுதி அரேபிய விண்வெளி ஆய்வுத் திட்டம் மனிதகுலத்துக்குச் சிறந்த சேவை செய்ய உதவும் வகையில் சவுதி விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது’ எனக் கூறியிருக்கும் சவுதி விண்வெளி ஆணையம், ‘அவர்களில் ஒருவர் சவுதி பெண்ணாக இருப்பார். அவரது விண்வெளி பணி சவுதி ராஜ்ஜியத்துக்கு ஒரு வரலாற்று முன்னுதாரணமாக இருக்கும்’ என்றும் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறது. இதன் நீட்சியாக மேலும் பல பெண்களுக்கு விண்வெளித் திட்டங்களில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சியால் இது சாத்தியமாகியிருக்கிறது. சவுதி பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2018-ல் சவுதி அரேபியா நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, பெண்களை விண்வெளிக்கு அனுப்பும் வகையில் அந்நாடு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x