ஈரான் நாட்டில், மஹஸா ஆமினி எனும் பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அந்நாட்டுப் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடக்குமுறைக்கு எதிராக வெடித்திருக்கும் போராட்டத்தை முடக்க, ஈரான் அரசு வன்முறையைப் பிரயோகித்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
மஹஸா ஆமினி எனும் பெண், தனது குடும்பத்தினருடன் தலைநகர் டெஹ்ரானுக்குச் சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி, அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில், ஹிஜாப் முறையாக அணியப்படுகிறதா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் வேலையை அந்தப் பிரிவு போலீஸார் செய்துவருகின்றனர்.
ஈரானின் வடமேற்கில் உள்ள குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த, 22 வயதான மஹஸா ஆமினி சமீபத்தில் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றிருந்தார். அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி செவ்வாய்க்கிழமை (செப்.13) அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில், ஹிஜாப் முறையாக அணியப்படுகிறதா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் வேலையை அந்தப் பிரிவு போலீஸார் செய்துவருகின்றனர். 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் இது தொடர்பான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்தச் சூழலில், மஹஸா ஆமினி கைதுசெய்யப்பட்ட பின்னர் அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும், அவரது தலையில் பலமாக அடிபட்டதால்தான் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, போலீஸ் வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் தாக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் டெஹ்ரான் போலீஸார் அதை மறுத்தனர். செப்டம்பர் 16-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை போலீஸார் நசுக்குவதாகக் கூறி ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்தப் போராட்டங்களை வன்முறை வடிவில் அரசு நசுக்கிவருகிறது. இதுவரை, 6 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கின்றனர். எனினும், இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். டிக்டாக்கில் பல பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி வீசும் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகிய சமூக ஊடகங்களை ஈரான் அரசு தடை செய்திருக்கிறது.
குறிப்பாக, அதிக அளவில் போராட்டங்கள் நடந்துவரும் குர்திஸ்தான் மாகாணம், தலைநகர் டெஹ்ரான் போன்ற பகுதிகளில் இணைய இணைப்பும் ஏறத்தாழ முழுமையாக முடங்கியிருக்கிறது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அது தொடர்பான படங்களையும் செய்திகளையும் பிறருக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இணைய பயன்பாட்டுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நாடான ஈரானில், டிக்டாக், ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் அடிக்கடி முடக்கப்படுகின்றன. எனினும், இணையப் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் விபிஎன் வலைப்பின்னலைப் பயன்படுத்தி அரசின் முடக்க நடவடிக்கைகளை முறியடித்துவருவது குறிப்பிடத்தக்கது.