‘அரிசி, கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியது ஏன்?’ - அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா கொடுத்த விளக்கம்


கோதுமை, அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது ஏன் என ஜெனிவாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியா விளக்கமளித்திருக்கிறது.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரை மையமாகக் கொண்டு செயல்படும் உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான விவகாரங்களை இந்த அமைப்பு கவனித்துக்கொள்கிறது. கூடவே, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த அமைப்பு ஈடுபட்டிருக்கிறது. இந்த அமைப்பின் கூட்டம் தற்போது நடந்துவருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை கலந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தின்போது, கோதுமை, அரிசி ஆகிய உணவு தானியங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், செனகல் போன்றவை கேள்வி எழுப்பின. இந்தியாவின் இந்த முடிவால் உலகளாவிய சந்தையில் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அந்நாடுகள் சுட்டிக்காட்டின.

என்ன பின்னணி?

கடந்த மே மாதம், கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தது. உள்நாட்டில் கோதுமை தடையின்றி கிடைக்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்தியா தெரிவித்தது. அத்துடன், இந்த மாதம் உடைத்த அரிசி ஏற்றுமதியையும் தடை செய்த இந்தியா, கரீஃப் பருவத்தில் நெல் சாகுபடி குறைந்திருப்பதால், பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியையும் விதித்தது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து உடைத்த அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் செனகல் நாடு, நெருக்கடியான காலகட்டத்தில் போதுமான உணவு விநியோகத்தை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்று சமீபத்திய கூட்டத்தில் கேட்டுக்கொண்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பின.

இதற்கு விளக்கமளித்த இந்தியா, கோழி தீவனத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் உடைந்த அரிசிக்கான ஏற்றுமதி தடை குறித்து பேசுகையில், உள்நாட்டு சந்தையில் ஏற்படவிருக்கும் அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டியிருந்ததாலேயே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது.

கோதுமையைப் பொறுத்தவரை, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளின் அடிப்படையில் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததாக இந்தியா விளக்கமளித்தது.

x