நியூயார்க்: இந்தியாவின் மக்கள் தொகை வரும் 2085-ம் ஆண்டில் சீனாவைப் போல இரண்டு மடங்காகும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறைக்கு உட்பட்ட மக்கள் தொகைபிரிவு, ‘உலக மக்கள் தொகைவாய்ப்பு அறிக்கையை’ வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியாகும். வரவிருக்கும் 2085-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாகப் பெருகும் என்றும்,இந்தியாவின் மக்கள் தொகை 2085-ல் சீனாவின் மக்கள் தொகையைப் போல இரண்டுமடங்காகப் பெருகி விடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2085-ல் இந்தியா (161 கோடி), சீனாவை (80.6 கோடி) தொடர்ந்து 2100 ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகை பின்வருமாறு பெருகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது: பாகிஸ்தான் (51.1 கோடி), நைஜீரியா (47.7 கோடி), அமெரிக்கா (42.1 கோடி). இந்த தரவரிசை பட்டியலில் அமெரிக்கா இடம்பெற அயல் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் மக்கள் தொகை 34.5 கோடியாகும்.
இந்தியாவை பொருத்தவரை கடந்த 2011-ம் ஆண்டில்தான் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021-ம் ஆண்டில் நடத்தப்படவேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று காரணமாக காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டது. இதனிடையில் ஐ.நா.வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி சீனாவில் முதியோரின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள் தொகை பாதியாக குறையும். தற்போது இந்தியாவின் சராசரி வயது 28.4 ஆகும். சீனாவின் சராசரிவயது 39.6 ஆகும். இதுவே 2100-ம்ஆண்டில் இந்தியாவின் சராசரி வயது 47.8 ஆகவும், சீனாவின் சராசரி வயது 60.7 ஆகவும் மாற வாய்ப்புள்ளது. ஆகையால் 2049-ம்ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் பணிபுரியும் வயது வரம்பைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 102.7 கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் தொகைபெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் பணிபுரியும் வயது வரம்பைச் சேர்ந்த இளம் இந்தியர்களுக்கு உரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே எதிர்கால சவாலாக இருக்கும்.
கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடுதல் முதலீடு செய்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான சீர்திருத்தநடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அரசின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது