‘நல்ல நிலையில் இல்லை நம் உலகம்’ - ஐநாவில் பிரியங்கா சோப்ரா ஆதங்கம்


“நம் உலகம் தற்போது நல்ல நிலையில் இல்லை. எனினும், அதற்குத் தீர்வு காண நம்மிடம் திட்டம் இருக்கிறது” என்று ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.

ஐநா சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பிரதிதியாக நேற்று ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “இந்த உலகத்தின் நன்மைக்காகப் போராடிவரும் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த உலகின் அடித்தளத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” என்று கூறிய அவர், “நம் உலகம் இன்றைக்கு நல்ல நிலையில் இல்லை. ஆனால், அதற்குத் தீர்வு காண நம்மிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அது ஐநா நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்” என்று குறிப்பிட்டார்.

“உலகம் மிக முக்கியமான பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் சூழலில் இன்று நாம் கூடியிருக்கிறோம். கோவிட் -19 பெருந்தொற்றின் பேரழிவு விளைவுகளின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீண்டுவர முடியாத நிலையில் உலக நாடுகள் இருக்கின்றன. பருவநிலை மாற்றம் உயிர்களைப் பாதித்துவருகிறது. வறுமை, புலம்பெயர்தல், பட்டினி, சமத்துவமின்மை போன்றவை நாம் பாடுபட்டு உருவாக்கிய உலகின் அடித்தளத்தையே தகர்க்கின்றன. இந்தச் சூழலில், உலக நாடுகளிடையே ஒற்றுமை மிகவும் அவசியம்” என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.

பெண் கல்வி உரிமைச் செயற்பாட்டாளர் மலாலா யூசஃப்ஸாய், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளர் அமண்டா கோர்மன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஐநா பொதுச் சபையில் இரண்டாவது முறையாகக் கிடைத்த வாய்ப்பில், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறித்து பெருமிதம் தெரிவித்திருக்கும் பிரியங்கா சோப்ரா, ‘எனக்குக் கிடைத்திருக்கும் இந்த இரண்டாவது தருணத்தில் கல்வி மாற்றத்துக்கான உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அடித்தட்டு - நடுத்தர – உயர் வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளால், ஒரு சிறிய கதையை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. கல்வி அமைப்பு அவர்களைக் கைவிட்டுவிட்டது. அதேசமயம், ஒவ்வொரு குழந்தைக்குமான கல்விக்கான உரிமைக்காக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

x