தைவான் நாட்டில், ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கான இல்லத்தில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மன்னிப்பு கோரியிருக்கிறது.
தைவான் நாட்டின் தாவ்யுவான் நகரில் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கான அரசு இல்லம் நடத்தப்பட்டுவருகிறது. இலையுதிர்காலத்தின் இடைப் பகுதிக்கான அறுவடை திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 7-ல் அந்த இல்லத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 12 முதியவர்களின் முன்னிலையில், நடன மங்கைகள் ஆபாச நடனம் ஆடினர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தைவான் குடிமக்கள் பலர் கொந்தளித்தனர். மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் அந்த நோயாளிகள், அந்த நடனத்தைக் கைதட்டி வரவேற்கவே செய்தனர். ஆனாலும், நாட்டின் மூத்த குடிமக்கள், அதுவும் முன்னாள் ராணுவத்தினர் முன் இப்படி ஒரு ஆபாச நடனம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
கண்டனம் வலுத்த நிலையில், தாவ்யுவான் நகர முதியோர் அரசு இல்லம் மன்னிப்பு கோரியிருக்கிறது. “இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் பொழுதுபோக்கும் விதத்திலும் அவர்களை மகிழ்விக்கும் விதத்திலும்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், இதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களுக்கு மிகவும் வருந்துகிறோம்” என்று அரசு இல்லத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.