சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஈரானைச் சேர்ந்த இருவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் நாடு சிரியா. 2011-ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. இரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா போராளிகள், சிரிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். தற்காப்பு எனும் பெயரில் சிரிய அரசுப் படைகள் மீதும், ஹிஜ்புல்லா போராளிகள் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
கடந்த மாதம், சிரியாவின் அலெப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. டார்டஸ் மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதியில் நடத்திய தாக்குதலில் மூன்று சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர். முன்னதாக, ஜூன் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக டமாஸ்கஸ் விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (செப்.17) காலையில் டமாஸ்கஸ் விமான நிலையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், சிரிய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் ஆதரவு போராளிகள் இருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக சிரியாவின் மனித உரிமைகள் போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.