எலிசபெத் ராணி சவப்பெட்டியைப் பார்க்க சீனப் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?


மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள் கிழமை (செப்.19) நடக்கவிருக்கும் நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியைப் பார்க்க சீனப் பிரதிநிதிகளுக்கு அனுமதி கிடையாது எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதன் பின்னணி என்ன?

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), செப்டம்பர் 8-ம் தேதி, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை அன்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 14-ம் தேதியே அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்நிகழ்வில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் லண்டன் செல்லவிருக்கின்றனர். சீனாவிலிருந்தும் பிரதிநிதிகள் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

என்ன காரணம்?

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் முஸ்லிம்கள் மீது கடும் அடக்குமுறை நிகழ்த்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. உய்குர் முஸ்லிம் சமூகம் மற்றும் பிற முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஜின்ஜியாங் மாகாணத்தில், தடுப்பு முகாம் எனும் பெயரில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அந்த முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகள் பலர் அங்கு பெரிய அளவில் அக்கிரமங்கள் நடப்பதாகப் பதிவுசெய்திருக்கின்றனர். உடல்ரீதியான சித்திரவதை, அவமதிப்புகள் ஆகியவற்றுடன் கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்த போதனை வகுப்புகளும் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

ஆனால், அந்த முகாமில் மொழி தொடர்பான அடிப்படைப் பயிற்சிகளும், வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளும் வழங்கப்படுவதாக சீனா விளக்கமளித்துவருகிறது. குறிப்பாக, தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க இந்த முகாம்கள் அவசியம் என்பது சீன அரசின் வாதம்.

உய்குர் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள், அந்த முகாம்களில் சிறைவைக்கப்பட்டு விடுதலையானவர்கள், சிறைவைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, புகழ்பெற்ற கலைஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் அந்த முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புக்கான பயிற்சி எனும் தேவையே அவர்களுக்கு இல்லை என உய்குர் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள் என சீனா பதிலடி கொடுத்துவருகிறது.

சீனாவின் விளக்கங்களை ஏற்காத அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், சீனாவில் இனப்படுகொலை நடப்பதாகவே குற்றம்சாட்டிவருகின்றன. இதனால் கோபமடைந்திருக்கும் சீனா, பிரிட்டன் எம்.பி-க்கள் பலர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. இதனால், பிரிட்டன் அரசும் சீனா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. கடந்த ஆண்டு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அந்நாட்டுக்கான சீனத் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தச் சூழலில், பிரிட்டனுடன் தூதரக உறவு வைத்திருக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அதில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பட்டியல் பிரிட்டன் வெளியுறவுத் துறையால் பரிந்துரைக்கப்பட்டு பக்கிங்காம் அரண்மனையால் இறுதிசெய்யப்படும்.

சீனாவின் துணை அதிபர் வாங் சீஷான் அந்நாட்டின் பிரதிநிதியாக, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் ராணியின் சவப்பெட்டியைப் பார்க்க அனுமதி மறுக்கப்படுமா எனும் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x