கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோயில், காலிஸ்தான் தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் அமைந்திருக்கிறது பாப்ஸ் ஸ்வாமிநாராயண் கோயில். சமீபத்தில் அங்கு சென்ற காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், அக்கோயிலின் சில பகுதிகளைச் சேதப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சுவற்றில் எழுதிவைத்தனர். இந்தச் சம்பவம் எப்போது நடந்தது எனும் தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடாவுக்கான இந்தியத் தூதரகம் ட்வீட் செய்திருக்கிறது. அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி-யான சந்திரா ஆர்யா, ‘இது தனித்ததொரு சம்பவம் அல்ல, இதற்கு முன்பும் கனடாவின் இந்துக் கோயில்கள் வெறுப்புக் குற்றங்களுக்குள்ளாகியிருக்கின்ரன. இது கனடாவில் வசிக்கும் இந்துக்களைக் கவலையுறச் செய்திருக்கிறது’ என ட்வீட் செய்திருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி-யான சோனிய சித்துவும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.