இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸ், ஹில்ஸ்பரோ கோட்டையின் பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட முயன்றபோது பேனாவிலிருந்து மை ஒழுகியதால் கோபமடைந்தார். இந்தக் காட்சி அடங்கிய காணொலி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சார்லஸ், பிரிட்டனில் உள்ள இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். தனது மனைவியும் புதிய ராணியுமான கமீலாவுடன் அந்நாடுகளுக்குச் செல்லும் அவர் அங்குள்ள மக்களிடம் தனது தாயின் மறைவுக்கு அனுதாபம் கோருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகருக்கு அருகில் உள்ள ஹில்ஸ்பரோ கோட்டைக்குச் சென்றார். அங்கு பார்வையாளர்கள் கையெழுத்திட வைக்கப்பட்டிருக்கும் குறிப்பேட்டில் சார்லஸ் கையெழுத்திட முயன்றார். அப்போது அந்தப் பேனா ஒழுகியதால் எரிச்சல் அடைந்தார்.
“இப்படியான கடுப்பேற்றும் சமாச்சாரங்களை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது” என்று கோபம் தொனிக்கக் கூறியவர், “அடக் கடவுளே! நான் இதை வெறுக்கிறேன்” என்று முணுமுணுத்துக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார். அவரிடமிருந்து பேனாவை வாங்கிக்கொண்ட ராணி கமீலா, அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
அவரும், “பேனாவிலிருந்து மை ஒழுகி எல்லாப் பக்கமும் போகிறது” என்றபடியே விரலைத் துடைத்துக்கொண்டார். சற்று நேரம் அங்கு நின்று முணுமுணுத்தபடி இருந்த சார்லஸ், விரல்களை அழுந்தத் துடைத்தவாறு அங்கிருந்து வெளியேறினார்.
ஏற்கெனவே பொதுவெளியில் கோபத்தை வெளிக்காட்டத் தயங்காத சார்லஸ், மன்னரான பின்னர் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட முற்பட்டபோது, மேசையைச் சுத்தம் செய்யுமாறு பணியாள் ஒருவரிடம் கோபமாக சைகை காட்டிய காட்சியும் வைரலானது குறிப்பிடத்தக்கது.