‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ வெப் தொடரில் நடித்திருக்கும் கலைஞர்கள் மீது சில ரசிகர்கள் இனவெறி ரீதியில் அவதூறு செய்த நிலையில், தொடரின் சக நடிகர்களும், ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ வரிசைப் படங்களில் நடித்த பிரதான நடிகர்களும் அதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர்.டோல்க்கீன் எழுதிய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் பல்வேறு பாகங்களாக வெளியான திரைப்படங்கள் உலகத் திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவை. புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்ஸனின் அந்தப் படைப்புகள் பல்வேறு விருதுகளையும் அள்ளின. திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், வீடியோ கேம் எனப் பல்வேறு வடிவங்களில் வந்த ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ கதை தற்போது ஓடிடி வெளியீட்டுக்கும் தயாராகியிருக்கிறது.
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் பெயரில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவிருக்கும் இந்தத் தொடரில், மோர்ஃபிட் கிளார்க், வில் ஃப்ளெட்சர், ஃபேபியன் மெக்கல்லம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் தொடரின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, தொடரில் நடித்திருக்கும் சில நடிகர்கள் குறித்த இனவெறித் தாக்குதலில் ரசிகர்கள் பலர் இறங்கினர். குறிப்பாக, எல்ஃப் எனும் பாத்திரத்தில் நடிக்கும் இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா எனும் நடிகர், புவெர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த கலப்பினத்தவர். அவரை இழிவுபடுத்தும் வகையில் கேவலமான பின்னூட்டங்கள் வந்தன.
அமேசான் ப்ரைம் வீடியோவில் ரசிகர்கள் வீடியோ பதிவிடும் வசதி இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு சில ரசிகர்கள் இனவெறி அடிப்படையிலான காணொலிகளைப் பகிர்ந்தனர். இதையடுத்து, அந்த வசதியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது அமேசான்.
இதையடுத்து, இத்தொடரின் படக்குழுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ’எங்கள் நடிகர்களுக்குத் துணை நிற்கிறோம்’ எனும் வாசகத்துடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘எங்கள் ‘தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ குழுவைச் சேர்ந்த சில நடிகர்கள் மீது தினமும் இணையத்தில் நடக்கும் இனவெறித் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்று எதிராக ஒற்றுமையாக நிற்கிறோம். இதைக் கண்டுகொள்ளாமலும், பொறுத்துக்கொண்டும் நாங்கள் இருக்க மாட்டோம்’ என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ ட்ரைலாஜி படங்களில் நடித்த பிரதான நடிகர்களான எலிஜா வுட், பில்லி போய்ட், டொமினிக்கன் மோனோகான், ஷான் ஆஸ்டின் ஆகியோரும் இத்தொடரின் நடிகர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கின்றனர்.