ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி செலுத்துவதில் சர்ச்சை: பின்னணி என்ன?


ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்நாட்டின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் ஷின்ஸோ அபேவுக்கு அரசு இறுதி அஞ்சலி செலுத்துவதை ஏன் பலர் எதிர்க்கிறார்கள்? பார்க்கலாம்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67), ஜூலை 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் படுகொலை செய்தவர் முன்னாள் கடற்படை வீரர் டெட்ஸுயா யமாகாமி எனத் தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். தென் கொரியப் பின்னணி கொண்ட தேவாலயம் ஒன்றுக்குத் தனது தாய் அதிக அளவில் நன்கொடை கொடுத்ததால், அவரது குடும்பம் திவாலானதாக விசாரணையில் டெட்ஸுயா யமாகாமி, தெரிவித்திருந்தார். அந்த தேவாலயத்துடன் ஷின்ஸோ அபே தொடர்பில் இருந்ததால் அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் கூறியிருந்தார்.

துப்பாக்கிப் பயன்பாட்டுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், யமாகாமி எப்படி துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் சந்தேகங்கள் எழுந்தன. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கியை அவர் தனது வீட்டிலேயே தயாரித்தது பின்னர் தெரியவந்தது. ஷின்ஸோ அபேவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததற்குப் பொறுப்பேற்று தேசிய காவல் துறைத் தலைவர் இட்டாரு நகாமுரா ஆகஸ்ட் 25-ல் பதவிவிலகினார்.

இதற்கிடையே, ஜூலை 12-ம் தேதி ஷின்ஸோ அபேயின் இறுதிச்சடங்கை அவரது குடும்பம் தனிப்பட்ட முறையில் நடத்தியது. டோக்கியோவில் உள்ள ஸோஜோஜி பவுத்த ஆலயத்தில் நடந்த இந்த இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆலயத்துக்கு வெளியே பொதுமக்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். எனினும், அரசுமுறைப்படி அவருக்கு இறுதி அஞ்சலி நடத்தப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியிருந்தார்.

அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி ஷின்ஸோ அபேவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த ஜப்பான் அரசு தீர்மானித்திருக்கிறது. டோக்கியோவில் உள்ள புடோக்கான் பகுதியில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஒபாமா, ஜப்பான் பட்டத்து இளவரசர் உட்பட 6,000 பேர் கலந்துகொள்வார்கள் என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில்தான், இப்படி ஒரு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி தேவையா எனப் பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இரண்டு எதிர்க்கட்சிகள் இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன. இத்தனைக்கும் ஜப்பானில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான தருணமாக இந்நிகழ்வை முன்வைக்கவே ஃபுமியோ கிஷிடா அரசு திட்டமிட்டது. ஆனால், பெரும்பாலான மக்கள் அதை ஏற்கவில்லை.

என்ன காரணம்?

ஷின்ஸோ அபே தனது ஆட்சிக்காலத்தின்போது, ராணுவத்தைப் பலப்படுத்த எடுத்த முயற்சிகள் சர்ச்சையாகின. தவிர அவரது அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அவருக்குப் பின்னடைவைத் தந்திருந்தன. குறிப்பாக, அவரது படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட்ட தேவாலயத் தொடர்பும் அவர் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. அந்த தேவாலயம் பெருமளவில் நிதி திரட்டுவது, தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொள்வது எனப் பல்வேறு புகார்களுக்குள்ளானது. அந்த தேவாலயத்தின் மீது பல வழக்குகளும் உள்ளன. ஷின்ஸோ அபேயின் தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சேர்ந்த தலைவர்கள் அந்த தேவாலயத்துடன் தொடர்பில் இருப்பதாக வெளியான செய்திகளும் ஜப்பானியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஷின்ஸோ அபேவுக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி செலுத்தக்கூடாது எனப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிகழ்வை ரத்து செய்யக்கோரி 2.8 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மனு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக, 1.7 பில்லியன் யென் (12 மில்லியன் டாலர்கள் - இந்திய மதிப்பில் ஏறத்தாழ 95 கோடி ரூபாய்!) செலவில் இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ஷிகெரு யோஷிடாவுக்கு 1967-ம் ஆண்டில் அரசுமுறை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 18 மில்லியன் யென் செலவானது (இன்றைய இந்திய மதிப்பில் 3.8 கோடி ரூபாய்). இந்தச் சூழலில் இவ்வளவு செலவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பதிலாக அந்தத் தொகையை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

x