மங்கோலியாவுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அந்நாட்டு அதிபர் ஒரு வெள்ளை நிறக் குதிரையைப் பரிசாக அளித்திருக்கிறார்.
ராஜ்நாத் சிங், செப்டம்பர் 5-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஜப்பான் மற்றும் மங்கோலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதன் முதற்கட்டமாக, கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மங்கோலியாவுக்கு செப்டம்பர் 5-ல் அவர் சென்றார். 7-ம் தேதி (இன்று) வரை அவர் அங்கு தங்கியிருந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் அந்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செல்வது இதுவே முதல் முறை.
நேற்று அந்நாட்டின் அதிபர் உக்னாக்லின் குரேல்சுக்கைச் சந்தித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இரு நாட்டு உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுகுறித்து நேற்று ட்வீட் செய்த ராஜ்நாத் சிங், ‘குரேல்சுக் மங்கோலியாவின் பிரதமராக இருந்தபோது, 2018-ல் அவரைச் சந்தித்திருக்கிறேன். அந்தச் சந்திப்பைத் தற்போது அவர் நினைவுகூர்ந்து பேசினார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ராஜ்நாத் சிங்குக்கு அழகான வெள்ளை நிறக் குதிரையை குரேல்சுக் பரிசாக அளித்தார்.
இதுதொடர்பாக மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கும் ராஜ்நாத் சிங், அந்தக் குதிரைக்கு ‘தேஜா’ எனப் பெயர் சூட்டியிருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர், 2015-ல் பிரதமர் மோடி மங்கோலியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டின் அப்போதைய பிரதமர் சிமெட் சைகான்பிலேக், அவருக்கு ஒரு பழுப்பு நிற பந்தயக் குதிரையைப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.